போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
சாமல்பட்டியில் விசாரணைக்காக சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி சாலை மறியலில் ஈடுபட்ட 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊத்தங்கரை:
சாமல்பட்டியில் விசாரணைக்காக சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி சாலை மறியலில் ஈடுபட்ட 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அமர்நாத். நேற்று முனதினம் மாலை இவர் பணியில் இருந்தார். அப்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தனது பெயர் குப்புசாமி என்றும், சாமல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு பிரச்சினை நடந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் சாமல்பட்டி அம்பேத்கர் நகருக்கு சென்றனர். அவர்கள் குப்புசாமியின் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசிய நபர், பெண் குழந்தை ஒருவருக்கு வன்கொடுமை நடந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
தாக்குதல்-சாலை மறியல்
அப்போது சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மோகன் என்கிற ஜிம்மோகன் (வயது 43) என்பவர் மதுபோதையில் அங்கு வந்தார். அவர் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத்திடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கினார். இதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஜிம் மோகன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டவர்கள் சாமல்பட்டி போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் கொடுத்த புகாரின் பேரில் சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தி ஜிம்மோகன் மற்றும் 25 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வழக்குகளில் தொடர்புடையவர்
ஜிம் மோகன் மீது ஏற்கனவே சாமல்பட்டி போலீஸ் நிலைய எல்லையில் 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சரித்திர பதிவேட்டில் அவர் கண்காணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.