கந்திகுப்பம் அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே பெரியபனமுட்டுலுவை அடுத்த தூளிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி சின்ன பாப்பா (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (37). சுப்பிரமணி மற்றும் சின்னராஜ் குடும்பத்தினருக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று சின்ன பாப்பாவுக்கும், சின்னராஜிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சின்னராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்ன பாப்பாவை சரமாரியாக வெட்டினார். அதை தடுக்க முயன்றபோது சின்ன பாப்பாவின் 2 கைகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.