ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல்
பண்ருட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் லோகநாதன் மகன் சீனிவாசன் (வயது 50). இவருடைய அண்ணன் மகள் விமலா. இவரை அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரஞ்சித் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் சீனிவாசன், ரஞ்சித் இடையே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சீனிவாசன் தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரஞ்சித் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வடமலை மகன் கண்ணதாசன் (வயது 37), சின்னப்பையன் மகன் மணிபாலன், கனகராஜ் மகன் நாராயணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனிவாசனை ஆபாசமாக திட்டி கல்லால் தாக்கினர். இதை தடுக்க வந்த சீனிவாசனின் மனைவி சோனியா, மகன் சிபிராஜ் ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், சோனியா, சிபிராஜ் ஆகியோர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.