உடன்குடியில் வாலிபர் மீது தாக்குதல்
உடன்குடியில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய எட்டு பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பரிபூரண விஜயன் (வயது 32). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினையில் பரிபூரண விஜயனும், அவரது நண்பர்களும் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி உள்ளிட்ட அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரிபூரண விஜயன் ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த பரிபூரண விஜயனை, சத்யமூர்த்தியும் அவரது நண்பர்களும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், சத்தியமூர்த்தி அவரது நண்பர்கள் ராஜசேகர், முருகேஷ், மாதேஷ், ஆத்தீஸ் பிச்சையா, எம்.ஜி.ஆர்.நகர் சூர்யா, மணிகண்டன், பிசகுவிளை வருண் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடிவருகின்றனர்.