அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் மீது தாக்குதல்


அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் மீது தாக்குதல்
x

ஜோலார்பேட்டை அருகே தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்

தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிபட்டு கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை அன்று ஆனந்தன் என்பவரது தலைமையில் தி.மு.க.வில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நேற்று முன்தினம் ஆனந்தன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. ஆனந்தனின் மகனான ராணுவ வீரர் சிலம்பரசன் கடந்த 3-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஒரு மாத விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் சண்டையை விலக்கச் சென்றுள்ளார். அவரையும் தாக்கியுள்ளனர். இதில் சிலம்பரசனுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ்நிலையம் முற்றுகை

இதுபற்றி தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் ஆனந்தனை தாக்கியதாக தி.மு.க.வை சேர்ந்த 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று பரபரப்பு காணப்பட்டது.


Next Story