கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதில் தகராறு: அ.தி.மு.க. பிரமுகரை தாக்கிய வாலிபர் கைது
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதில் தகராறில் அ.தி.மு.க. பிரமுகரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவில் வசித்து வருபவர் கோதண்டராமன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் நகரமன்ற கவுன்சிலராக உள்ளார். இவருடைய மகன் அன்பு என்கிற அன்பரசன் (வயது 30). இவர் அ.தி.மு.க. நகர மாணவர் அணி செயலாளராக உள்ளார். பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த தீனா என்கிற வைத்தியநாதன் (30) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதற்காக அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை யாரோ பூந்தோட்டம் பாலம் அருகே செல்போன் கடை வைத்துள்ள பூந்தோட்டம் மேட்டுத்தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (24) என்பவரின் கடை முன்பிருந்த விளம்பர பதாகையில் ஒட்டிவிட்டனர். இதனை அன்பரசனிடம் சென்று நீதான் எங்கள் கடையின் விளம்பர பதாகையின் மீது போஸ்டர் ஒட்டினாயா? என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யபிரகாஷ், அவரது தந்தை விஜயகுமார் (50), இவருடைய மூத்த மகன் சந்திரமோகன் (27), உறவினர் வெங்கட் ஆகியோர் சேர்ந்து அன்பரசனை திட்டி இரும்புக்கம்பியால் தலையில் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அன்பரசன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சூரியபிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாசை கைது செய்தனர். இதேபோல் சந்திரமோகன், மேற்கு போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் அன்பரசன், ரமேஷ் மகன் கிருபாகரன், அன்பரசனின் தந்தை கோதண்டராமன் ஆகியோர் தனது தந்தை விஜயகுமாரை தாக்கியதாக கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் அன்பரசன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.