விருத்தாசலத்தில் பரபரப்புதியேட்டருக்குள் புகுந்து மேலாளர், ஊழியர்கள் மீது தாக்குதல்3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


விருத்தாசலத்தில் பரபரப்புதியேட்டருக்குள் புகுந்து மேலாளர், ஊழியர்கள் மீது தாக்குதல்3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தியேட்டருக்குள் புகுந்து மேலாளர், ஊழியர்களை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் பஸ் நிலையம் பின்புறத்தில் சினிமா தியேட்டர் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று மதியம் 2 மணி காட்சியாக, பொம்மை நாயகி என்ற படம் திரையிடப்பட்டது.

அப்போது, படம் பார்ப்பதற்காக 2 பேர் தனித்தனியாக ஸ்கூட்டியில் அங்கு வந்தனர். அதில் ஒருவர் தனியாகவும், மற்றொருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.

அங்குள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு அவர்கள் சென்ற போது, தியேட்டர் ஊழியர் ராஜேந்திரன் (வயது 50) என்பவர், ஸ்கூட்டிகளை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அதன்பேரில், குடும்பத்துடன் வந்தவர் மட்டும் ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தினார். ஆனால் மற்றொருவர் வழியில் நிறுத்தினார். இதுபற்றி ராஜேந்திரன் அவரிடம் கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மற்றொரு ஸ்கூட்டியில் குடும்பத்துடன் வந்திருந்த வாலிபரும் அவருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தாக்குதல்

இதற்கிடையே படம் திரையிடுவதற்கான நேரம் வந்ததால், டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர் மூடப்பட்டது. தொடர்ந்து,வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இருவரும் படம் பார்க்க தங்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கவுண்ட்டரில் கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள், அவர்கள் குடிபோதையில் வந்திருப்பதாக கூறி டிக்கெட் வழங்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் தியேட்டர் மேலாளர் செல்வகணபதியை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது அங்கிருந்த செல்வ கணபதியின் மகன் ரவி, அவர்களை தட்டிக்கேட்டபோது அவரையும் திட்டி தியேட்டரை கொளுத்தி விடுவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரும் மற்றொரு வாலிபருக்கு போன் செய்து அங்கு வரவழைத்தனர். தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து தியேட்டர் ஊழியர்களை ஆபாசமாக திட்டி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கண்காணிப்பு கேமரா காட்சி

இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் ஊழியர்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 வாலிபர்களும் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தியேட்டரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் மூலமாக விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

தற்போது, தியேட்டருக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story