பெண்ணை தாக்கி நகை பறிக்கமுயன்ற வாலிபர் சாவு


தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற வாலிபர் இறந்து போனார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற வழக்கில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நகை பறிக்க முயற்சி

தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் ராஜகுரு. இவர் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முருகேசுவரி (வயது 26). சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து, முருகேசுவரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது விழித்துக் கொண்ட முருகேசுவரி சத்தம் போட்டார்.

பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்

இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர் தான் மறைத்து வைத்து இருந்த ஸ்குரு டிரைவரால் முருகேசுவரியின் கழுத்தில் குத்தி விட்டு, அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

அப்போது, முருகேசுவரியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அந்த சமயத்தில் வீட்டில் இருந்து வெளியில் ஓடிவந்த மர்மநபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மர்மநபரை தென்பாகம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நகை பறிக்க முயன்றவர் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த தங்கராஜ் மகன் வினோத் (34) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோத் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story