கண்டக்டரை தாக்கி அரசு பஸ் மீது கல்வீச்சு
நாகர்கோவிலில் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாததால் கண்டக்டரை தாக்கி அரசு பஸ் மீது கல்வீசிய போதை ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாததால் கண்டக்டரை தாக்கி அரசு பஸ் மீது கல்வீசிய போதை ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
அரசு பஸ்சில் பயணம்
திருச்செந்தூரில் இருந்து திங்கள்சந்தைக்கு அரசு பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ்சில் கண்டக்டராக திங்கள்சந்தையை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 34) என்பவர் பணியில் இருந்தார். நள்ளிரவில் இந்த பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை வந்தடைந்தது.
அப்போது பஸ் நிலையத்தில் சில பயணிகள் ஏறினர். இதில் 35 வயதுடைய வாலிபர் ஒருவரும் பையுடன் ஏறினார். பின்னர் அவர் வெட்டூர்ணிமடம் செல்ல வேண்டும் என கூறி கண்டக்டரிடம் டிக்கெட் எடுத்துள்ளார்.
கண்டக்டர் தாக்கப்பட்டார்
இந்த நிலையில் பஸ் வெட்டூர்ணிமடம் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தூரம் கடந்து சென்று டிரைவர் நிறுத்தியுள்ளார். இதனால் பஸ்சில் இருந்த வாலிபர் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாதது ஏன்? என கூறி கண்டக்டர் சுந்தர்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு கண்டக்டர் ஏதோ கூற அந்த ஆசாமி ஆத்திரமடைந்தார்.
ஏற்கனவே மதுபோதையில் இருந்த அந்த ஆசாமி, தனது பையில் இருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து சுந்தர்ராஜை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த கண்டக்டர் அலறினார். மேலும் பஸ்சில் இருந்த சில பயணிகளும் கூச்சலிட்டனர்.
கல்வீச்சு; ஆசாமி தப்பி ஓட்டம்
உடனே ஆசாமி பஸ்சில் இருந்து அவசர, அவசரமாக கீழே இறங்கினார். மேலும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் அந்த கண்ணாடி சேதமடைந்தது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து ஆசாமியின் தாக்குதலால் காயமடைந்த கண்டக்டர் சுந்தர்ராஜை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இதுதொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை பிடிக்க வடசேரி பஸ் நிலையம் மற்றும் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
எல்லை பிரச்சினை
முன்னதாக இந்த புகாரை விசாரணை நடத்துவதில் நேசமணிநகர், வடசேரி போலீசாருக்கு இடையே எல்லை பிரச்சினை நிலவியது. இதனால் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
பிறகு உயர் அதிகாரி உத்தரவை தொடர்ந்து நேசமணி நகர்போலீசார் எல்லைக்குட்பட்டது என கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.