பாலம் கட்டும் பணியை தடுக்க முயற்சி; கிராம மக்கள் 80 பேர் கைது


பாலம் கட்டும் பணியை தடுக்க முயற்சி; கிராம மக்கள் 80 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாலம் கட்டும் பணியை தடுக்க முயன்ற கிராம மக்கள் 80-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாலம் கட்டும் பணியை தடுக்க முயன்ற கிராம மக்கள் 80-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

5 கிராம விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடி ஊராட்சி பால்குளம், ஊரவயல், கருங்குடி, மாவிலிங்கைஏந்தல் மற்றும் காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வளமாவூர் ஆகிய 5 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுடைய வாழ்வாதாரமே விவசாயம்தான். பால்குளம் கண்மாய்க்கு உரிய வரத்து கால்வாய் இல்லாததால் வானம் பார்த்த பூமியான பால்குளம் கண்மாய்க்கு மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பெருகும். இதை நம்பியோ அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும் என்ற சூழல் இருந்து வருகின்றது. இந்த பால்குளம் கண்மாய் தண்ணீரை நம்பி 300 ஏக்கரில் 5 கிராம விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பாலைக்குடியில் இருந்து, பால்குளம், கொத்தியார்கோட்டை வழியாக சோழந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் கொத்தியார்கோட்டை அருகில் நெடுஞ்சாலை துறையினர் சாலையை உடைத்து பாலம் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு தொடங்கினர்.

பாலம் கட்டும் பணி

இந்த பாலம் அமைக்கும் பணியானது சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் இந்த பாலம் அமைப்பதற்கு 5 கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதாவது கொத்தியார் கோட்டை அருகில் சாலையின் நடுவில் பாலம் அமைத்தால் பால்குளம் கண்மாயின் தண்ணீர் கொத்தியார் கோட்டை வழியாக வெளியேறுவதால் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிைடயே பாலத்தின் வேலையை தொடங்கி உள்ள ஒப்பந்தக்காரர் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி ஒப்பந்தக்காரர் மீண்டும் பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

80 பேர் கைது

இதை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் தென்னரசு மற்றும் திருப்பாலைக்குடி போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைதுறையின் பாலம் கட்டும் பணியை தொடங்கினர். நேற்று 5 கிராமங்களை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து பாலம் கட்டும் பணியை தடுக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் பெண்கள் உள்பட பலரையும் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். கிராம மக்கள் 80-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி அப்பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Related Tags :
Next Story