மேலூரில் நள்ளிரவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி- கண்காணிப்பு கேமராவில் சிக்கிய ஆசாமிக்கு வலைவீச்சு
மேலூரில் நள்ளிரவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவத்தின் அடிப்படையில் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
மேலூர்,
மேலூரில் சந்தைபேட்டை என்னுமிடத்தில் கடைகள் வரிசையாக சாலையோரம் உள்ளன. இங்கு நள்ளிரவில் அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவன் பெரிய கடப்பாரை கம்பியால் அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டுக்களை உடைத்துள்ளான். இதில் பிரபல தனியார் எலக்ட்ரானிக் கடை ஒன்றில் வெளிபக்க பூட்டை நீண்ட நேரம் போராடியும் அந்த ஆசாமியால் பூட்டை உடைக்கமுடியவில்லை. அதனை தொடர்ந்து ஜவுளிக்கடை, செல்போன் கடை, டீக்கடை, வீட்டு கட்டுமான பொருட்கள் கடை ஆகியவற்றின் பூட்டுக்களை அந்த ஆசாமி உடைத்து உள்ளே புகுந்து தேடி பார்த்தும் பணம் கிடைக்காததால் சில பொருட்களை திருடி சென்றுள்ளான்.
நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் பதிவாகியுள்ள ரகசிய கேமராக்கள் காட்சியை அடிப்படையாக கொண்டு மேலூர் போலீசார் அந்த ஆசாமியை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மேலூரில் நள்ளிரவில் நிலவி வரும் கடும் குளிரால் வீடுகளில் ஜன்னல்கள் பூட்டப்படுவதாலும், மக்கள் நடமாட்டம் இல்லாததையும் பயன்படுத்தி பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் திருடர்களின் நடமாட்டம் இருப்பதாகவும், எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.