மறியலில் ஈடுபட ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயற்சி; 15 பேர் கைது
மறியலில் ஈடுபட ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். இது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. ஆகவே அக்னிபத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை ரெயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ரெயில் நிலையம் முன்பு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.