வாலிபரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயற்சி; போலீசாரை கண்டதும் வெடிகுண்டு வீச்சு-2 பேர் கைது


வாலிபரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயற்சி; போலீசாரை கண்டதும் வெடிகுண்டு வீச்சு-2 பேர் கைது
x

திருச்சியில் நள்ளிரவில் வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி பணம் பறிக்க முயன்ற போது, போலீசார் வந்ததால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சியில் நள்ளிரவில் வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி பணம் பறிக்க முயன்ற போது, போலீசார் வந்ததால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள்

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் பிரவீன். இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளராக உள்ளார். இதேபோல் மேலஅம்பிகா புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் அதே அமைப்பில் மாணவரணி செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்கள் 2 பேரும் தென்னூர் பகுதியில் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு, அதன் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் (28) தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

நாட்டு வெடிகுண்டு வெடித்தது

அப்போது பிரவீன், மணிகண்டன் ஆகியோர் சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்தனர். பின்னர் காரில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். அந்த சமயம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த தில்லைநகர் போலீசார் அங்கு வந்தனர்.

போலீசாரை கண்டதும் பிரவீன், மணிகண்டன் ஆகியோர் தங்களிடம் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் வீசினர். இதில் கால்வாயில் வீசப்பட்ட ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. கால்வாய் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

2 பேர் கைது

இதற்கிடையில் தப்பிய ஓடிய 2 பேரையும் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் போலீசார் கால்வாயில் வீசப்பட்ட வெடிக்காத நாட்டு வெடிகுண்டையும், நாட்டுதுப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூரியபிரகாஷ் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன், மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இவர்கள் கடந்த 10-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து நாட்டு வெடிகுண்டு, நாட்டுத்துப்பாக்கியை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எதற்காக வெடிகுண்டு, துப்பாக்கி வாங்கி வந்தனர். ஏதேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனரா? அவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story