மிளகாய் பொடி தூவி மருமகனை வெட்டிக் கொல்ல முயற்சி...! மாமியார் வெறிச்செயல்....!
காதல் திருமணத்தால் பெண் வீட்டார் ஆத்திரம், மிளகாய் பொடியைத் தூவி வெட்டிக் கொல்ல முயற்சி - படுகாயங்களுடன் மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் கார்த்திக். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகள், ஜோதி என்பவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பெற்றோரின் விருப்பத்தை மீறி நடந்த திருமணத்தால், ஜோதியின் குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு, பால்ராஜ், அவரது மனைவி துளசியம்மாள் மற்றும் அவர்களது 11-ஆம் வகுப்பு பயிலும் மகன் ஆகியோர், விக்னேஷ் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு, விக்னேஷ் கார்த்திக் மீது மிளகாய் பொடியைத் தூவி, அரிவாளால் வெட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்ததை தொடர்ந்து, மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த விக்னேஷ் கார்த்திக், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் மூவரையும் பிடித்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.