விவசாயியை கொல்ல முயற்சி: ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
கடமலைக்குண்டு அருகே விவசாயியை வெட்டி கொல்ல முயன்ற ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கடையை சேர்ந்தவர் பழனி (வயது 56). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் சங்கிலிக்கரடு அருகே உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கடமலைக்குண்டுவை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான ராமகிருஷ்ணன் என்ற ஜல்லி (27) தனது ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பழனி, தனது தோட்டத்தில் ஆடுகளை மேய்க்கக்கூடாது என்று கண்டித்தார்.
இதனால் அவருடன் ராமகிருஷ்ணன் தகராறு செய்தார். பின்னர் அவர் கையில் வைத்து இருந்த கத்தியால் பழனியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் செல்வப்பெருமாள் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாத் இன்று தீர்ப்பு கூறினார். அதில் பழனியை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ராமகிருஷ்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து ராமகிருஷ்ணனை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.