4 கடைகளில் கொள்ளையடிக்க முயற்சி
திண்டிவனத்தில் 4 கடைகளில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் காந்தி சிலை அருகில் மல்லிபத்தன் தெருவை சேர்ந்த குமுதா (வயது 40) என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். பக்கத்து கட்டிடத்தில் நல்லியக்கோடன் நகர் உமாபதி தெருவை சேர்ந்த ஜான்(30) என்பவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டரும், ஆனந்த் என்பவர் செல்போன் சர்வீஸ் கடையும் நடத்தி வருகிறார். மாடியில் பேன்சி கடை உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலையில் 4 கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து கடையின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், கடைக்குள் சென்று பார்த்தனர். ஆனால் 4 கடைகளிலும் எந்த பொருளும் கொள்ளை போகவில்லை.
கேமராவில் பதிவு
இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று 4 கடைகளையும் பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில், கடைகளின் பூட்டை மர்மநபர்கள் உடைத்த காட்சி பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.