கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி
x

வீட்டுக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மனு அளிக்க வந்த ஒரு தம்பதியினர், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்ததும் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தவுடன் அவர்களை தடுத்தனர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.

பரபரப்பு

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அன்னவல்லி பகுதியை சேர்ந்த குணசேகரன், மனைவி மலர் (வயது 40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த மலர், குணசேகரன் குடும்பத்தினரை வீட்டை காலி செய்யுமாறு, அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மிரட்டி வீட்டுக்கு தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மலர், குணசேகரன் ஆகியோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story