போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த கொத்தனார்
போலீஸ் நிலையம் முன்பு கொத்தனார் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள முருக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). கொத்தனார். இவருக்கும், இவரது மனைவி கவுசல்யாவுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கவுசல்யா தனது கணவர் பிரச்சினை செய்வதாக உலகம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணிக்கத்திடம் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மாணிக்கத்தை, சப்-இனஸ்பெக்டர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணிக்கம் கையில் பெட்ரோல் கேனுடன் உலகம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் தான் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்கப்போவதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் அவரிடம் சமரசம் செய்து அழைத்து சென்றனர். அவரிடம் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பேசி சமாதானம் செய்தார். இதையடுத்து மாணிக்கம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.