ஒரே குடும்பத்தில் 10 பேர் தீக்குளிக்க முயற்சி


ஒரே குடும்பத்தில் 10 பேர் தீக்குளிக்க முயற்சி
x

சேலத்தில் ரவுடியின் தம்பி திடீர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலத்தில் ரவுடியின் தம்பி திடீர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்புஏற்பட்டது.

ரவுடி மீது தாக்குதல்

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் சின்னவர் (வயது 28). பிரபல ரவுடி. இவர், ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து ஓமலூரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த வாரம் கிச்சிப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தபோது அவரை ரவுடி செல்லத்துரையின் கூட்டாளிகள் சிலர் கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சின்னவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் ரவுடி சின்னவரின் தம்பி மணி என்பவரை கிச்சிப்பாளையம் போலீசார் மற்றொரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனிடையே, மணியின் தாய் பூமாலை (48), அவருடைய மருமகள்கள் மேகலா, செல்வி, மகள் சீனி, பேரக்குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த டவுன் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த 10 பேரும் சாலையில் படுத்து உருண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த பெண் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விடுவிக்க வேண்டும்

இதுகுறித்து பூமாலை கூறுகையில், எனது மகன் சின்னவரை 10 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இளைய மகன் மணியை போலீசார் பிடித்து சென்றுவிட்டனர். எந்த காரணமும் இல்லாமல் எப்படி கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். அவனை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம், என்றார்.


Next Story