ராமநத்தத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி:போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ராமநத்தத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அக்காள், தங்கை இருவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் மாணவிகள் இருவரும் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள அவர்களின் தாத்தா வீட்டுக்கு வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை அவர்களின் தாத்தா, பாட்டி இருவரும் வயல் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் 2 மாணவிகளும் வீ்ட்டில் இருந்தனர்.
பலாத்காரம் செய்ய முயற்சி
அப்போது அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் சேவியர்(23) என்பவர் 7-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் சேவியர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
பின்னர் நடந்த சம்பவத்தை மாணவி அவளது தாத்தா பாட்டியிடம் கூறி அழுதாள். இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மாணவியிடம் விசாரணை நடத்தி அவளை மருத்துவ பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கைது
இது குறித்து ராமத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேவியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ராமநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.