வியாபாரியை வெட்டி கொள்ளை முயற்சி
பாளையங்கோட்டையில் வியாபாரியை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 64). இவர் அங்குள்ள ரெயில்வே கேட் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த பகுதியில் சாந்திநகரை சேர்ந்த ஷேக் சுலைமான் (54) என்பவர் காலணி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு நந்தகோபாலனின் செல்போன் கடையை கொள்ளையர்கள் உடைத்து திருட முயற்சித்தனர். இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கடை வியாபாரி அங்கு வந்தார். அவர் நந்தகோபாலுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நந்தகோபாலும், அவருடைய மகனும் அங்கு வந்தனர்.
அப்போது கொள்ளை கும்பல் பாலத்தின் தூண் மறைவின் மறைந்து நின்றனர். அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது, அவர்கள் நந்தகோபாலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது செல்போன் கடை மற்றும் காலணி கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.