தஞ்சை அருகே பரபரப்பு.. அடகு கடை சுவரில் துளைபோட்டு கொள்ளை முயற்சி..!
கொள்ளை அடிக்கும் போது அலாரம் சத்தம் கேட்டு பிடிக்க முயன்ற பொதுமக்களை கற்களால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
தஞ்சை:
தஞ்சை அருகே உள்ள மருங்குளம் கடைவீதியில் கவுசல்யா என்ற பெயரில் நகை அடகு கடை உள்ளது. இதனை கொல்லாங்கரையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி அடகு கடையின் அருகில் இருந்த மருந்தக கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மருந்தக கடைக்குள் இருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்தனர். இதையடுத்து கடைக்குள் இருந்த அலாரத்கை செயலிழக்க செய்வதற்காக அதன் வயரை துண்டிக்க முயற்சித்தபோது அலாரம் அடித்தது.
சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை பொதுமக்கள் சிலர் விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது சாலையில் கிடந்த கற்களை பொது மக்கள் மீது வீசி விட்டு தப்பி தலைமறைவாகி விட்டனர். இந்த தாக்குதலில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை, தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
அடகு கடையில் உடனடியாக அலாரம் ஒலித்து பொதுமக்கள் திரண்டதால் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போகாமல் தப்பின. மேலும் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.