திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: தோட்டத்தில் பதுக்கிய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்


திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி: தோட்டத்தில் பதுக்கிய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் சோதனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் லோடு வேனில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவுப்படி திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று லோடு வேனை சோதனை செய்தனர்.

120 கிலோ கஞ்சா

அப்போது 3 சாக்குப் பைகளில் 120 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா மற்றும் லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக என்.முத்தையாபுரத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மோர் (22), ஆலந்தலையை சேர்ந்த எட்ரியான் (21) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு நேற்று நேரில் வந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும், லோடு வேனையும் பார்வையிட்டார். மேலும் பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்.

ரூ.1 கோடி

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இது எங்கிருந்து வந்தது? என்பது குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். முதல் கட்டமாக நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.

இதேபோல் கடந்த ஆண்டு சூரங்குடியில் 540 கிலோ கஞ்சா, தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கஞ்சா எங்கிருந்து வருகிறது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் நபர்களை விரைவில் பிடித்து விடுவோம். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் முழுமையான தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story