போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி
ஜோலார்பேட்டையில விசாரணைக்கு சென்ற வியாபாரி, பஒலீஸ் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடுக்கல் வாங்கல் தகராறு
நாட்டறம்பள்ளி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் விசாரணைக்கு சென்ற வியாபாரி போலீஸ் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த டோல்கேட் முத்தனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 35). அதேப் பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வினோத்குமாருக்கும், மாசிலாமணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாசிலாமணி, வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வினோத்குமார் நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தற்கொலைக்கு முயற்சி
அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் மாசிலாமணியை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்திற்கு வெளியே சென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்துவந்து போலீஸ் நிலையம் முன்பு தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனே போலிசார் அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.