கியாஸ் சிலிண்டர் விற்பனை முகவர் உரிமம் பெற முயன்ற வக்கீலிடம் ரூ.21½ லட்சம் மோசடி; பீகார் வாலிபர்கள் 3 பேர் கைது


கியாஸ் சிலிண்டர் விற்பனை முகவர் உரிமம் பெற முயன்ற  வக்கீலிடம் ரூ.21½ லட்சம் மோசடி; பீகார் வாலிபர்கள் 3 பேர் கைது
x

சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை முகவர் உரிமம் பெற முயன்ற ஆண்டிப்பட்டியை சேர்ந்த வக்கீலிடம் ஆன்லைன் மூலம் ரூ.21½ லட்சம் மோசடி செய்த பீகாரை சேர்ந்த 3 வாலிபர்களை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தேனி

ஆண்டிப்பட்டி வக்கீல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). இவர் வக்கீல் படிப்பு படித்துவிட்டு வேலை தேடி கொண்டு இருந்தார். கடந்த ஆண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை முகவருக்கான அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூகுளில் தேடிப் பார்த்தார். அப்போது அதில் வந்த ஒரு இணையதள முகவரியில் சென்று தனது பெயர் மற்றும் செல்போன் எண்ணை பதிவிட்டார்.

இந்நிலையில் அவருடைய செல்போன் எண்ணுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை சம்பந்தப்பட்ட சமையல் கியாஸ் நிறுவனத்தின் மேலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து அவர் இந்தியில் பேசினார். ஆனால், பாலமுருகன் தனக்கு இந்தி தெரியாது என்பதால், ராணுவத்தில் பணியாற்றும் தனது உறவினரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, ஒரே நேரத்தில் 2-க்கும் மேற்பட்ட நபர்கள் செல்போனில் பேசிக் கொள்ளும் கான்பரன்ஸ் அழைப்பில் அவர்கள் பேசினர்.

ரூ.21½ லட்சம் மோசடி

இதையடுத்து மேலாளர் என்று தொடர்பு கொண்ட மர்ம நபர், இணையதளம் வாயிலாக ஆவணங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டதால் பாலமுருகன் தனது ஆவணங்களை அனுப்பினார். பின்னர் அந்த நிறுவனத்தின் பெயரில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள், சிலிண்டர் விற்பனை முகவர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ.21 லட்சத்து 64 ஆயிரத்து 700 செலுத்த வேண்டும் என்று கூறினர். அதை நம்பிய பாலமுருகன் அந்த தொகையை வங்கிக் கணக்கு மூலம் அனுப்பி வைத்தார். அதற்கு அவர்கள் ஒரு ஆவணத்தை அனுப்பி வைத்தனர். அது போலியானது என்று தெரியவந்ததால், பாலமுருகன் தனக்கு அழைப்பு வந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டார். அப்போது அவை அணைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பீகார் வாலிபர்கள்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் தொடர்பு கொண்ட செல்போன் எண்கள், வங்கிக் கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்த போது, இந்த மோசடியில் ஈடுபட்டது பீகார் மாநிலம் நவதா மாவட்டம், பக்ரிபர்வான் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தால்போஸ்ட் கிராமத்தை சேர்ந்த ரோஷன் குமார் (28), அவருடைய தம்பி ஆசிஷ் என்ற தீபக்குமார் (27) என்பது தெரியவந்தது.

அவர்களை பிடிக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பீகார் மாநிலத்துக்கு சென்று விசாரித்த போது, அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

பின்னர் இதுகுறித்து நவதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், தேனி சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்து, தேனியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்படும் நபர்களின் விவரங்களை தெரிவித்தனர்.

3 பேர் கைது

இந்நிலையில், பக்ரி பர்வான் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்த 33 பேர் கொண்ட கும்பலை கடந்த வாரம் பீகார் மாநில போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த 33 பேரில் தேனி சைபர் கிரைம் போலீசாரால் தேடப்பட்ட ரோஷன்குமார், தீபக்குமார் ஆகிய 2 பேரும் இருந்தனர். அவர்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்த போது, தங்கள் கிராமத்தை சேர்ந்த பல்ராம் (20) என்பவருடன் சேர்ந்து பாலமுருகனிடம் பண மோசடி செய்ததாக கூறினர்.

பின்னர் இந்த வழக்கில் ரோஷன்குமார், தீபக்குமார், பல்ராம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு தேனி கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்களை கைது செய்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து தேனி தனிப்படை போலீசார் பீகார் மாநிலத்துக்கு சென்று சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர்.

தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். மேலும், தாங்கள் கமிஷன் அடிப்படையில் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், தங்களை போன்ற பல குழுக்கள் செயல்படுவதாகவும், அந்த கும்பலின் தலைவன் கூறும் உத்தரவுப்படி செயல்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ள கும்பலின் தலைவன் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story