தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், அரியலூர் அரசு ஆண்கள் பள்ளி நுழைவு வாயிலில் நடைபெற்றது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உரிய மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மகேந்திரன், மகளிர் அணி அமைப்பாளர் உமா, இணைச்செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் பேசினர். மாநில இணை செயலாளர் கோபிநாதன், மாவட்ட துணை தலைவர் சின்னதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.