பொதுமக்கள், விசாரணை கைதிகளிடம் போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்
பொதுமக்கள், விசாரணை கைதிகளிடம் போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அறிவுரை கூறினார்.
ஆவூர்:
கீரனூர் சரகத்திற்கு உட்பட்ட மாத்தூர், மண்டையூர், கீரனூர், உடையாளிப்பட்டி மற்றும் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பொதுமக்கள் மற்றும் விசாரணை கைதிகளிடம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி மாத்தூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு பேசுகையில், போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மற்றும் விசாரணை கைதிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அப்போது புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி புகாரை பெற்றுக்கொண்டு அவர்களது புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைக்க வேண்டும். தேவையின்றி யாரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்யக்கூடாது. குற்ற வழக்குகளில் யாரையாவது கைது செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறி உள்ளதா என்று பரிசோதனை செய்து அதன்பிறகு கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கூறினார். நிகழ்ச்சியில் கீரனூர் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன் (மாத்தூர்), லதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, அன்பழகன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆலங்குடி சரக போலீஸ் நிலையத்துக்குட்பட்ட குற்றவாளிகளை போலீஸ் நிலையத்தில் அடைக்கும் போது எப்படி அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலான விழிப்புணர்வு முகாம் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. முகாமில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் கலந்து கொண்டனர்.