உரிமை கோராத 12 மாடுகள் ஏலம்
கீழக்கரை நகராட்சியில் உரிமை கோராத 12 மாடுகள் ஏலம் விடப்பட்டன.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிவதாக மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து மாட்டிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆணையிட்டார். அதன்படி கீழக்கரை கமிஷனர் செல்வராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கீழக்கரையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து அடைத்தனர்.அதில் கன்றுகள் உள்பட 15 மாடுகளை அதன் உரிமையாளர்கள் ரூ.24 ஆயிரம் அபராதம் செலுத்திவிட்டு மீட்டு சென்றனர். நகராட்சி மூலம் அறிவிப்பு வெளியிட்டும் மாட்டின் உரிமையாளர்கள் மீட்க வராத மீதமுள்ள கன்றுகள் உள்பட 12 மாடுகளை ரூ.52 ஆயிரத்து 700-க்கு முறைப்படி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா தலைமையில் ஏலம் விடப்பட்டன. இதனால் தெருவில் சுற்றி திரிந்த மாடுகள் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.76 ஆயிரத்து 700 வருமானம் ஈட்டியது. அப்போது இளநிலை உதவியாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயகுமார், சரவணகுமார், ஏலதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.