வாகன சோதனையில் பறிமுதல் செய்த ஆட்டோ திடீர் மாயம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாகன சோதனையில் பறிமுதல் செய்த ஆட்டோ, சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த போது திடீரென மாயமானது. அபராத தொகை கட்டிய ரசீதுடன் வந்த டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாகன சோதனையில் பறிமுதல் செய்த ஆட்டோ, சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த போது திடீரென மாயமானது. அபராத தொகை கட்டிய ரசீதுடன் வந்த டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
அபராதம்
சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50), ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டவுன் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தபோது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஆட்டோவை நிறுத்தினர்.
அப்போது, ஆட்டோவுக்கு இன்சூரன்ஸ் இல்லை எனக்கூறி போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், கோர்ட்டில் அபராதம் செலுத்திவிட்டு ஆட்டோவை எடுத்து செல்லுமாறு கூறினர். இதையடுத்து ரவி அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த மாதம் 10-ந் தேதி டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து ரவியின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், கோர்ட்டில் அபராத தொகையை செலுத்திவிட்டு ஆட்டோவை எடுத்து செல்லுமாறும் தெரிவித்துள்ளார். அதன்பேரில், கோர்ட்டில் ஆஜரான அவருக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆட்டோ மாயம்
அதன்பிறகு ரவி அபராத தொகையை செலுத்திவிட்டு நேற்று காலை சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது, ரசீதை காட்டி ஆட்டோவை தரும்படி அங்கிருந்த போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த போலீசார் அவரது ஆட்டோவை தேடியபோது நிறுத்தி இருந்த ஆட்டோ மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் ரவி அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது, 2 ஆண்டுகளாக ஏன் ஆட்டோவை வாங்க வரவில்லை என்று அவரிடம் கேட்டபோது, தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆட்டோ ஏலம் விடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அபராத தொகை கட்டியதற்கான ரசீது வைத்துள்ளேன். இதனால் ஆட்டோ வேண்டும் என்று ரவி கூறினார்.
பின்னர் அவரிடம் ஆட்டோ எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து தருகிறோம் என போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.