வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது; சிறுமிகள் துப்பு கொடுத்ததால் பொதுமக்கள் துரத்திப் பிடித்தனர்


வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது; சிறுமிகள் துப்பு கொடுத்ததால் பொதுமக்கள் துரத்திப் பிடித்தனர்
x
தினத்தந்தி 25 Jun 2023 2:30 AM IST (Updated: 25 Jun 2023 5:06 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். சிறுமிகள் துப்பு கொடுத்ததால் அவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்தனர்

தேனி

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சங்கரேஸ்வரி (வயது 40). நேற்று காலை இவர், தனது வீட்டை பூட்டாமல் அருகில் இருந்த கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட்கள் வாங்கிவிட்டு அவர் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் நகை வைக்கும் பெட்டி கீழே கிடந்தது. அதை அவர் எடுத்து பார்த்தபோது அதற்குள் இருந்த 6 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரேஸ்வரி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் விசாரித்தார். அப்போது சிறுமிகள், "ஒரு அண்ணன் இந்த வீட்டுக்குள் இருந்து வெளியே சென்றார். அவர் பச்சை நிற சட்டை அணிந்து இருந்தார். அவருடைய கழுத்துப் பகுதியில் பச்சை குத்தி இருந்தார்" என்றனர்.

இதையடுத்து சங்கரேஸ்வரி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த பகுதியில் தேடினார். அப்போது சாலையில் ஒரு வாலிபர் பச்சை சட்டை அணிந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கழுத்துப் பகுதியில் பச்சை குத்தி இருந்தார். பொதுமக்கள் அவரை நிறுத்தி விசாரித்தபோது, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பொதுமக்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பழனிசெட்டிபட்டி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் கவுதம் காம்பீர் (19) என்பதும், அவர் ஆட்டோ ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கவுதம் காம்பீர் மீது ஏற்கனவே 4 திருட்டு வழக்குகள் உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து கவுதம் காம்பீரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பெரியகுளம் கிளை சிறையில் அடைத்தனர்


Next Story