பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் சாவு
மாதனூரில் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் டிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டுவாம்பட்டி பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் நந்தகுமார் (வயது 42) என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற மாதனூர் சுபா நகர் பகுதியை சேர்ந்த சிவராஜ் (44) என்பவர் மீது ஆட்டோ மோதியிருக்கிறது. இதில் காயமடைந்த சிவராஜை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மாதனூர் சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்து ஏற்படுத்தி விட்டு ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டி சென்றதாக கூறி அதேப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் கார்த்திக் (36) மற்றும் அப்பகுதி மக்கள் சிலர், நந்தகுமாரை மடக்கி பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த நந்தகுமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
பின்னர் வீட்டிற்கு சென்ற நந்தகுமார் மறுநாள் தூக்கத்திலிருந்து எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நந்தகுமாரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து நந்தகுமாருக்கு தலையின் நரம்பு ஒன்று துண்டிப்பு ஆகி இருப்பதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நந்தகுமாரின் உறவினர் சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர்.
இதேப்போல் சிவராஜ் அளித்த புகாரின் பேரில் நந்தகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நந்தகுமாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் மாதனூரில் இருந்து உள்ளி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.