ஆட்டோ டிரைவர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
ஆட்டோக்கள் நிறுத்த தடை
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோக்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். அந்த இடத்தில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி போக்குவரத்து போலீசார் ஆட்டோக்கள் நிறுத்த தடை விதித்தனர். மேலும் அங்கிருந்த ஆட்டோக்களையும் போலீசார் அப்புறப்படுத்தியதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று காலை ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்று கூறி சூப்பிரண்டிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் சிலர் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வாழ்வாதாரம்
நாங்கள் பழைய பஸ் நிலைய பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் ஆட்டோ ஓட்டி வருகிறோம். திடீரென போலீசார் அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்த கூடாது என கூறிவிட்டனர்.
இதுபற்றி கேட்டதற்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ஆட்டோக்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதனால் 130-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் 5 ஆட்டோக்கள் என்ற அடிப்படையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.