ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கம் (சி.ஐ.டி.யு.) திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஆட்டோ தொழிலை பாதுகாக்க ஆட்டோவுக்கான இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் தொடங்கி தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க டீசல், பெட்ரோல், கியாஸ் மானிய விலையில் வழங்க வேண்டும். குடிசை மாற்றுவாரியத்தின் மூலமாக ஆட்டோ டிரைவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருச்சி மாவட்ட தன்மைக்கு ஏற்றாற்போல் நியாயமான மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.