ஆட்டோ கவிழ்ந்து 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்
வாணியம்பாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூரை அடுத்த சோலூர் பகுதியிலிருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ வாணியம்பாடி நோக்கி நேற்று இரவு 8 மணியளவில் வந்து கொண்டிருந்தது. வளையாம்பட்டு கிராமம் சர்வீஸ் ரோடு வழியாக ஆட்டோ வந்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் திடீரென மோதிக் கொண்டது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் ஜெயந்தி, கனகா, கவிதா, ஸ்ரீதேவி, அகல்யா மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த முரளி, ஆட்டோ டிரைவர் ராமன் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீதேவி மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.