சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் திடீர் தர்ணா
வேலூரில் சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ டிரைவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் தர்ணா
வேலூர் கோட்டையில் சுற்றித்திரிந்த காதல் ஜோடிகளை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுசம்பந்தமாக சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் வேலூர் கோட்டையில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து கோட்டை நுழைவுவாயில் காந்திசிலை அருகே ஆட்டோக்களை நிறுத்த போலீசார் தடை விதித்தனர்.
இதனால் அங்கு கடந்த சில நாட்களாக ஆட்டோக்கள் நிறுத்தப்படாமல் இருந்தது. டிரைவர்கள் ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றனர். இந்தநிலையில் காந்திசிலை அருகே ஆட்டோக்களை நிறுத்தி இயக்கி வந்த டிரைவர்கள் நேற்று காலை சாரதிமாளிகை மேம்பாலத்தின் கீழ் வரிசையாக ஆட்டோக்களை நிறுத்தி சாலையோரம் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சேபனை கடிதம்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் காந்திசிலை அருகே ஆட்டோக்களை நிறுத்தி வந்தோம். திடீரென அங்கு ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என்று போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர். நாங்கள் வேறு இடத்தில் ஆட்டோக்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் மீண்டும் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்றனர்.
சில மணி நேரம் கழித்து ஆட்டோக்களை எடுத்துச் சென்று காந்தி சிலை அருகில் நிறுத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் இங்கு ஆட்டோக்களை நிறுத்த அனுமதி இல்லை என்றனர். அப்போது ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு போலீசார் கூறுகையில் நீங்கள் தொல்லியல் துறையிடம் ஆட்டோக்களை நிறுத்த ஆட்சேபனை இல்லை என கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆட்டோ டிரைவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.