தானியங்கி டிக்கெட் எந்திரம் பழுது
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரம் பழுதானது.
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக அம்ரித் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் எந்திரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. இதில் முன்பதிவில்லா டிக்கெட் உள்பட ரெயில்வே தொடர்பாக இதர தகவல்களை பயணிகள் பெற்று வந்தனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரம் நேற்று பழுதாகியிருந்தது. இதனால் ரெயில் நிலைய கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் பலர் காத்திருந்தனர். டிக்கெட் கவுன்ட்டரில் ஊழியர்கள் இல்லாத நேரத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரத்தில் பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெற முடியும். ஆனால் நேற்று இந்த எந்திரம் செயல்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர். தானியங்கி டிக்கெட் எந்திரம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.