விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது


விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு மேல் விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது என கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு மேல் விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது என கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஊட்டி சுற்றுலா மேக்சி கேப் ஓட்டுநர் சங்கம் சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரியில் தொழிற்சாலைகளோ மற்றும் வேறு தொழில்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் உள்ளனர். இந்தநிலையில் நீலகிரியில் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து சென்று வருகின்றனர். இதனால் சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தடுக்க வேண்டும்

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் தனியார் வாடகை வாகனங்கள் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், சுற்றுலா தலங்களுக்கு பேக்கேஜ் முறையில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே சப்-கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனுக்கள் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்ப செலவு, வாகன பராமரிப்பு, வாகன கடன் போன்றவற்றை கவனித்து வருகிறோம். எனவே, அனுமதிக்கப்பட்ட தூரத்துக்கு மேல் விதியை மீறி ஆட்டோக்கள் இயக்கக்கூடாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மறுபரிசீலனை...

தும்மனட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், தும்மனட்டியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி கிளை தொடங்கப்பட்டது. இதன் மூலம் நகைக்கடன், விவசாயக்கடன் போன்றவை மூலம் விவசாயிகளுக்கு பெரிதும் பயன் அளித்தது.

தற்போது அந்த வங்கியை மூடப்போவதாக தெரிய வருகிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story