பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம்


பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம்
x

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி தவசு திருவிழா 14 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி தவசு திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலையில் அம்பாள் தேரில் எழுந்தருளினார். மாலை 6 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் இரவு 7 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., டாக்டர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன், கோவில் பணியாளர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story