அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்: மறியல் போராட்ட அறிவிப்பால் திடீர் பரபரப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மறியல் போராட்ட அறிவிப்பால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை அவனியாபுரத்தில், பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இதற்கு அடுத்தடுத்த நாட்களில், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.
சில ஆண்டுகளாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது. அதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவனியாபுரத்தில் நேரடியாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கூடாது, விழா கமிட்டிதான் நடத்த வேண்டும் என கூறி போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன.
இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் அவனியாபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து அவனியாபுரத்தில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், போராட்டம் எதுவும் நடக்கவில்லை.