ஆவின் பால் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்


ஆவின் பால் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்
x

இடையக்கோட்டை பகுதியில், ஆவின் பால் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்

பால் உற்பத்தி

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பசு, எருமை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. காலை, மாலை மாடுகளில் பால் கறந்து தனியார் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இடையக்கோட்டை பகுதியில் வசிக்கிற பலருக்கு பால் உற்பத்தி தொழில் சிறந்த வருவாய் ஆதாரமாக உள்ளது.

கொள்முதல் விலை குறைப்பு

இந்தநிலையில் தனியார் கொள்முதல் நிலையங்களில், கடந்த மாதம் ஒரு லிட்டர் பசும் பால் ரூ. 34-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ரூ.27-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு ரூ.46 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் எருமை பால் ரூ.55-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.48-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு ரூ.65 வரை விற்கப்படுகிறது.

விவசாயிகள் பாதிப்பு

பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் திடீரென குறைத்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டு தீவனம், கடலை புண்ணாக்கு, தவிடு விலை உயர்ந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. எனவே இடையக்கோட்டை பகுதியில் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story