அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தங்கும் விடுதி அமைக்கப்படுமா?


அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தங்கும் விடுதி அமைக்கப்படுமா?
x
திருப்பூர்


பக்தர்கள் தங்குவதற்கு விடுதி அமைக்க வேண்டும். என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.

அவினாசி லிங்கேசுவரர் கோவில்

அவினாசியில் புகழ் மிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் இந்த திருத்தலம்தான். தமிழ்நாட்டில் 3-வது பெரிய தேரும் இந்த கோவிலில்தான் இடம் பெற்றுள்ளது. இந்த கோவில் காசிக்கு நிகர் அவினாசி என்றும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த கோவில் என்ற பல்வேறு சிறப்பகளை பெற்றுள்ளது.

இந்த கோவிலில் திருமணம் செய்தால் புதுமண தம்பதிகளை சுவாமியே அருளாசி வழங்குவதாக மகிமை உள்ளது. இதனால் முகூர்த்த நாட்களில் 40, 50 திருமணங்கள் இக்கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலுக்கு அருகில் உள்ள நான்கு ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் 26 திருமண மண்டபங்கள் உள்ளன.

பக்தர்கள் தங்கும் விடுதி

மேலும் வளர்ந்துவரும் அவினாசி நகரில் தொழில்கள் மற்றும் குடியிருப்புகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இத்தனை சிறப்புவாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் திருமண வைபங்கள் நடத்த வருபவர்கள் தங்குவதற்கு விடுதி எதுவும் கிடையாது. தொழில் ரீதியாக அவினாசிக்குவரும் வெளியூர் நபர்கள் தங்குவதற்கு எந்த வழியும் இல்லை. கோவிலில் திருவிழா நாட்களிலும, முகூர்த்த நாட்களிலும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் திருப்பூரில் அறை எடுத்து தங்க வேண்டும். அல்லது கோவில் வளாகத்தில் விடிய, விடிய உட்கார்ந்திருக்கவேண்டிய நிலை உள்ளது. ஆகவே வெளியூர் வெளிமாவட்டம், மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story