விபத்தை தவிர்க்க ஆபத்தான வளைவில் தடுப்பு சுவர்
விபத்தை தவிர்க்க ஆபத்தான வளைவில் தடுப்பு சுவர்
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு பகுதியில் ஆபத்தான வளைவில் விபத்தை தடுக்க தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனரக வாகனங்கள்
மடத்துக்குளத்திலிருந்து கணியூர் வழியாக காரத்தொழுவு, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடு உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நூற்பாலைகள், மட்டை மில்கள் உள்ளிட்டவற்றுக்கு செல்லும் கனரக வாகனங்களை இந்த ரோட்டில் அதிக அளவில் சென்று வருகின்றன. இதுதவிர காற்றாலைகள் பராமரிப்புக்காக அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்களும் இந்த ரோட்டு வழியாக சென்று வருகின்றன
.இதுதவிர பொதுமக்களும் விவசாயிகளும் அதிக அளவில் இந்த ரோட்டில் பயணம் செய்கின்றனர்.இதனால் இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த ரோட்டில் காரத்தொழுவு பகுதிக்கு அருகிலுள்ள ஓடையின் மேல் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.இந்த பாலத்தை ஒட்டி ரோடு அபாயகரமாக வளைந்து செல்கிறது.எனவே இந்த பகுதியில் விபத்துக்களைத் தவிர்க்கும் விதமாக ரோட்டின் பக்கவாட்டில் தடுப்பு கற்கள் வைக்கப்பட்டிருந்தது.ஆனால் அடுத்தடுத்து நடந்த விபத்துக்களால் இந்த கற்கள் சேதமடைந்து விட்டது.
தடுப்புகள்
தற்போது பக்கவாட்டில் எந்த விதமான தடுப்புகளும் இல்லாமல் மிக பாவகரமான நிலையில் உள்ளது.இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் வாகனங்கள் வளைவில் உருண்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே பாலத்தை ஒட்டிய இந்த அபாய வளைவின் பக்கவாட்டில் இரும்பு தடுப்புகள் வைக்கவும் அவற்றில் பிரதிபலிப்பான்கள் அமைத்து விபத்துக்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.இந்த வளைவின் பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் என பலவும் விபத்தில் சிக்கியுள்ள நிலையில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், இனி ஒரு விபத்து நடக்காத வகையிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.