மானியத்திற்காக மட்டும் வங்கி கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும்


மானியத்திற்காக மட்டும் வங்கி கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும்
x

மானியத்திற்காக மட்டும் வங்கி கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்

ராணிப்பேட்டை

மானியத்திற்காக மட்டும் வங்கி கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

கடன் பெறுவதற்கான ஆணை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வங்கியாளர் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி வங்கி கடன் உதவிகள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட 176 பயனாளிகளில் 22 பேருக்கு ரூ.56 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மானியத்திற்காக மட்டும்

வங்கிகள் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்குவோர், சுய தொழில் மேற்கொள்வோர் மற்றும் இதர வேலைகளுக்காக கடன் பெறுவோர்கள் முறையான ஆவணங்களை வங்கிகளுக்கு சமர்ப்பித்தால் கடன் கட்டாயமாக வழங்கப்படும். அதேபோன்று வாங்கிய கடனை வாடிக்கையாளர்கள் முறையாக திருப்பி செலுத்த வேண்டும். அரசு மானியம் பெறுவதற்கு மட்டுமே வங்கி கடன் பெறுவதை எண்ணமாக வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். கடன் பெற்று தாம் இப்பொழுது இருக்கும் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு மாறுவதற்கான பாதைகளை அமைத்துக் கொள்ள அரசு மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் உதவிகளை வழங்குகின்றது.

ஒவ்வொருவரின் வாழ்க்கை, குடும்ப மேம்பாட்டிற்காக அரசு திட்டங்களை வழங்குகிறது. ஆனால் ஒருசிலர் வங்கி கடன் பெற்று முழுமையாக கட்டாமல் விட்டு விடுகின்றனர். இதனால் மற்ற பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒருசிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்களும் பாதிப்படைகின்றனர்.

நோக்கம் நிறைவேறும் வகையில்

ஆகவே பொதுமக்கள் வங்கிகளிடமிருந்து எந்த நோக்கத்திற்காக கடன் பெறுகின்றோமோ அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் கடன் தொகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று மீண்டும் வங்கிகளுக்கு கடனை திருப்பி செலுத்தி மீண்டும் மீண்டும் கடன் பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

22 பேருக்கு ரூ.56 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் இன்றைய தினமே பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பயனாளிகளுக்கு வருகிற திங்கட்கிழமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரஹாம், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், பயிற்சி மைய மேலாளர் துர்கா பிரசாத், தாட்கோ மேலாளர் சசிகுமார், வாழ்ந்து காட்டும் திட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story