'விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்' - காவல்துறைக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
விசாரணை நடைமுறைகள் காவல்நிலையத்தில் உள்ள பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
சேலத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான புகார் குறித்து விசாரிப்பதற்காக ஆஜராகுமாறு போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் மனுதாரருக்கு எதிராக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அது குறித்து விசாரணை நடத்துவதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை விசாரணையில் மேஜிஸ்திரேட் கோர்ட்டு தலையிட முடியாது என்பதால், காவல்துறையினர் தங்களை துன்புறுத்தக் கூடாது என்ற கோரிக்கையுடன் ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
பொதுவாக காவல்துறை விசாரணையில் ஐகோர்ட்டு தலையிடுவதில்லை என்று தெளிவுப்படுத்திய நீதிபதி, விசாரணைக்கு அழைக்கப்படுபவர்கள் துன்புறுத்தப்படுவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தால், நீதிமன்றம் கண்மூடிக்கொண்டு இருக்காது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதால், அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு அழைப்பதற்காக அனுப்பப்படும் சம்மன் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
விசாரணை நடைமுறைகள் காவல்நிலையத்தில் உள்ள பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.