அவ்வையார் பாடல்களை கல்வெட்டுகளாக பதிக்கும் பணி விரைவில் தொடங்கும்- அமைச்சர் சேகர் பாபு


அவ்வையார் பாடல்களை கல்வெட்டுகளாக பதிக்கும் பணி விரைவில் தொடங்கும்- அமைச்சர் சேகர் பாபு
x

வேதாரண்யத்தில் உள்ள அவ்வையார் கோவிலில் பாடல்களை கல்வெட்டுகளாக பதிக்கும் பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தஞ்சாவூர்

திருவையாறு:-

வேதாரண்யத்தில் உள்ள அவ்வையார் கோவிலில் பாடல்களை கல்வெட்டுகளாக பதிக்கும் பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அவ்வையார் கோவில்

திருவையாறில் உள்ள அவ்வையார் கோவிலில் குடமுழுக்கு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி முதல் கால யாகசாலை பூஜை நேற்று தொடங்கியது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அவ்வையார் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். அவருடைய பாடல்கள் மனித குலத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், மனிதனை நெறிப்படுத்துகிற பாடல்களாக அமைந்திருக்கின்றன.

கல்வெட்டுகளாக...

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அவ்வையாருக்கு முதல் முதலாக கோவில் அமைக்கப்பட்டது. அங்கு குடமுழுக்கு விழா நடத்தி, ஒரு மண்டபத்தை கட்டி அதில் அவருடைய பாடல்களை கல்வெட்டுகளாக பதித்து வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அதற்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதுதொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து அந்த பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம்.

கயிலாயம் என போற்றப்படுகிற வெள்ளியங்கிரி மலை, சங்ககிரி மலை, பர்வத மலை, போளூர் நரசிங்க பெருமாள் மலை உள்பட 5 மலைகளில் பழமை மாறாமல் பக்தர்கள் சென்று வருவதற்கான பாதைகளையும், அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சித்தர்களுக்கு விழா

3 சித்தர்களுக்கு விழா எடுப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவாரூரில் உள்ள கமலமுனி நாதருக்கு விழா எடுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி இறையன்பர்களுக்கும், இறை வழிபாட்டுக்கும் உரிய ஆட்சி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

யாகசாலை பூஜையில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கூடுதல் திருப்பணி ஆணையர் கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், இணை ஆணையர் தென்னரசு, அவ்வையார் கோவில் திருப்பணி குழு செயலாளர் கலைவேந்தன், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் அடிகளார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story