மூன்றாம் பாலினத்தவருக்கு விருது-கலெக்டர் தகவல்
தர்மபுரி:
மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருதுக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மூன்றாம் பாலினத்தவருக்கு விருது
மூன்றாம் பாலினத்தினர் சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனி திறமைகளை வளர்த்து கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இவ்வாறு முன்னேறி இந்த சமுதாயத்தில் சமநிலை அடைந்துள்ளது, அவர்கள் படைத்த சாதனையாகும்.
இவ்வாறு சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவருக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந் தேதி வழங்கப்பட உள்ளது. சாதனை படைத்த மூன்றாம் பாலினரை கவுரவிக்கும் வகையிலும், மற்ற மூன்றாம் பாலினரை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது.
ரூ.1 லட்சம்
இந்த விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்று வழங்கப்படும். நடப்பாண்டில் இந்த விருதை பெற தகுதி உடைய திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 மூன்றாம் பாலினருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.
திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. இந்த விருதுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.