இளம் சாதனையாளர்களுக்கு விருது
கோவில்பட்டியில் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் மகிழ்வோர் மன்றத்தின் 56-வது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. சாத்தூர் உதவி கலெக்டர் அனிதா தலைமை தாங்கினார். மகிழ்வோர் மன்ற நிறுவனர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ், உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற காப்பாளர் செல்வின் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் நகைச்சுவை துணுக்குகளை கூறினார்கள். 1,330 திருக்குறள்களில் எந்த குறளை கேட்டாலும் உடனே குறளை கூறி அசத்திய சுப்பையாபுரம் அரசு பள்ளி மாணவிகள் ஜெகதீஸ்வரி, வீரசெல்வி, கே.ஆர்.ஏ.வித்யாஷ்ரம் பள்ளி மாணவி இளம் விஞ்ஞானி ரிதன்யா ஆகியோருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி நிதிஷா, நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவி மதுமிதா, சி.கே.டி மேல்நிலைப்பள்ளி மாணவர் நெல்லையப்பன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
மகிழ்வான இல்லறம் ஒரு வரம் என்ற தலைப்பில் பேச்சாளர் அருள் பிரகாஷ் பேசினார். கூட்டத்தில் மன்ற இயக்குனர் ஜான் கணேஷ், பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், மன்ற காப்பாளர் துரைராஜ், தொழில் அதிபர் பெரியசாமி பாண்டியன், தலைமையாசிரியர்கள் ராதா, நாயகம், ஆசிரியர் ராஜசேகர், உதவி பேராசிரியர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மன்ற காப்பாளர் சேர்மத்துரை நன்றி கூறினார்.