குமரியை சேர்ந்த 3 பள்ளிகளுக்கு விருது


குமரியை சேர்ந்த 3 பள்ளிகளுக்கு விருது
x

மாநில அரசு சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

மாநில அரசு சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த பள்ளிகளுக்கான விருது

தமிழக கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மாணவர் எண்ணிக்கை அதிகப்படுத்துதல், கற்றல் திறன் மேம்படுத்துதல், கழிவறைகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த பள்ளிகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கான மாநில அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த நெய்யூர் அரசு எல்.எம்.ஏரியா தொடக்கப்பள்ளி, தோட்டியோடு அரசு நடுநிலைப்பள்ளி, கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிகளுக்கான மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. விருதை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். விருது பெற்ற பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அரவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோவையில் மாநில அளவில் நடைபெற்ற துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டியில் பள்ளி அளவிலான இளநிலை பிரிவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீனு பிரசாத், 7-ம் வகுப்பு மாணவன் யோகேஷ்வரன் ஆகியோர் பங்கு பெற்று முதல் பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அரவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஹரிகுமார் (குளச்சல்), கலாவதி (கருங்கல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story