மஞ்சப்பை விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய காவேரிப்பட்டணம் அரசு பள்ளிக்கு விருது


மஞ்சப்பை விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய காவேரிப்பட்டணம் அரசு பள்ளிக்கு விருது
x
கிருஷ்ணகிரி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை கிண்டி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாடு வாரிய சேர்மேன் ஜெயந்தி வரவேற்றார். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநில அளவில் மஞ்சப்பை விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.10 லட்சம் மற்றும் மஞ்சப்பை விருது காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் பெற்றுகொண்டனர். 2-ம் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் மஞ்சப்பை விருது காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அனிதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 3-ம் பரிசு ரூ.3 லட்சம் மற்றும் மஞ்சப்பை விருது புதுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் காவேரிப்பட்டணம் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜிக்கு சுற்றுச்சூழல் செயல்வீரர் என்ற விருது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாஹு மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் தீபக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story