மாவட்டத்தில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் போதைப்பொருள்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல்:
விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி ராசிபுரம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் முன்னிலை வகித்தார். இதில் போலீசார், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், கடைவீதி உள்பட முக்கிய பகுதிகள் வழியாக சென்று, ஆத்தூர் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கஞ்சா, குட்கா, புகையிலை, பான் மசாலா உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றபடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம்
நாமகிரிப்பேட்டை காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்டன் தலைமையில் நாமகிரிப்பேட்டையில் இருந்து சீராப்பள்ளி வரை போலீசார் மோட்டார் சைக்கிள்களில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் சீராப்பள்ளி, ஆயில்பட்டி போலீஸ் நிலையங்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். அவர் போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்ணாநகர் பகுதியில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.